துயரில் தோய்ந்த இலங்கையில் நினைவு கூரப்படும் மேதினம்
உலக தொழிலாளர் தினம் இன்றாகும். உலகின் ஏராளமான நாடுகளில் வாழ்கின்ற தொழிலாளர்கள் இன்று பாட்டாளிகள் தினத்தை கொண்டாடுகின்றனர்.இலங்கையிலுள்ள தொழிலாளர்களும் வருடம் தோறும் மே தினத்தை கொண்டாடுவது வழக்கம். பேரணிகள்,கூட்டங்கள் என்றெல்லாம் பாட்டாளிகள் தினக் கொண்டாட்டம் இலங்கையில் களைகட்டுவது வழக்கம்.
ஆனால் இவ்வருட மேதினத்தை எமது தொழிலாளர்களால் கொண்டாட முடியாமல் போய் விட்டது. காரணம் எமது நாட்டில் ஈஸ்டர் ஞாயிறு தினத்தன்று இடம்பெற்ற துயரம் நிறைந்த சம்பவங்கள் ஆகும்.மே தின ஊர்வலங்களை நடத்துகின்ற மனநிலையில் இலங்கையின் தொழிற்சங்கங்கள் இன்று இல்லை. அவற்றில் பங்கேற்பதற்கான இயல்பு மனநிலை எமது தொழிலாளர்களிடம் இன்றில்லை. அவர்கள் துயரத்தில் இருந்து இன்னுமே மீளவில்லை. அதுமட்டுமன்றி, பாதுகாப்பு உத்தரவாதம் குறித்த அச்சமும் இன்றுள்ளது. எனவே இவ்வருட மேதினம் அமைதியாகிப் போயுள்ளது.ஆனாலும் பாட்டாளிகளின் உரிமைகளையும் அவர்களது சுதந்திரத்தையும் இன்றைய வேளையில் மறந்து விட முடியாது.
மே தினம் உலகத் தொழிலாளர்களின் ஒற்றுமையையும் மனஉறுதியையும் குறிக்கும் தினமாகும்.தொழிலாளர்கள் ஒன்று சேர்ந்து போராடினால் வெற்றியை அடைய முடியும் என்பதை உறுதிப்படுத்திய தினம் இதுவாகும்.
அமெரிக்காவில் 1890ம் ஆண்டு 8மணி நேரம் வேலை, 8மணி நேரம் ஓய்வு, 8மணி நேரம் உறக்கம் என்னும் கோரிக்கையை வலியுறுத்தியும், உழைப்புக்கு ஏற்ற ஊதியம் கேட்டும் தொழிலாளர்கள் போராடினர்.இதை எதிர்த்து அன்றைய அமெரிக்க அரசு ஈவிரக்கம் அற்ற தாக்குதலை நடத்தியது.ஏராளமான தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.உலகத் தொழிலாளர்களின் துன்பத்திற்கான காரணத்தைக் கண்டறிந்து, முதலாளிகளை ஓரங்கட்டி, தொழிலாளர்கள் ஆட்சியில் அமர்ந்தால்தான் அனைத்து விதமான துன்பங்களும் தீரும் என்று தொழிலாளர்கள் முடிவு செய்தனர்.
முதலாளிகள் உலக வரலாற்றின் வளர்ச்சிப் போக்கையே தடுத்து வருவதால் அதனை முடிவுக்குக் கொண்டு வரும் வல்லமை தொழிலாளர்களிடம் மட்டும்தான் உள்ளது என்று கூறி இதையெல்லாம் செய்வதற்கு உலகத் தொழிலாளர்களே ஒன்று சேருங்கள் என்றும் கூறினார்கள்.
உலகெங்கும் உள்ள தொழிலாளர்களின் இடைவிடாத போராட்டத்தால் தொழிலாளர் உரிமை நிலைநாட்டப்பட்டது.தொழிலாளர்களின் உழைப்பினால்தான் உலகமே இயங்குகிறது.தொழிலாளர்களின் உழைப்பு இன்றி எந்தப் பொருளும் உருவாவதில்லை என்பதை பாட்டாளிகள் உணர்ந்தனர்.தாம் விலங்குகளை விட கீழ்த்தரமாக நடத்தப்படுவதையும் உழைப்பின் பலன்களை எல்லாம் அனுபவிக்கும் முதலாளிகள் தொழிலாளர்களை வறுமையிலும் துன்பத்திலும் இருக்கும்படி செய்கின்றனர் என்பதையும் உணர்ந்து ஒன்றுபட்டு உரிமைக்காகப் போராடினர்.
1886ம் ஆண்டு அமெரிக்கத் தொழில் நகரங்களான நியூயோர்க், சிகாகோ, பிலடெல்பியா, மில்விக்கி, சின்சினாட்டி, பால்டிமோர் என அந்நாடு முழுவதும் சுமார் 350000 தொழிலாளர்கள் பங்கேற்ற மாபெரும் வேலைநிறுத்தம் தொடங்கியது.இந்த வேலைநிறுத்தத்தில் 1200க்கும் மேற்பட்ட நிறுவனங்களில் பணிபுரிந்த தொழிலாளர்கள் பங்கெடுத்துக் கொண்டனர். தொழிலாளர்களின் எழுச்சிமிக்க வேலைநிறுத்தத்தினால் அமெரிக்க பெருநிறுவனங்கள் மூடப்பட்டன. புகையிரதப் போக்குவரத்து நடைபெறவில்லை.வேலைநிறுத்தத்தில் பங்கேற்ற தொழிலாளர்களின் ஊர்வலங்கள் அமெரிக்காவை உலுக்கின.மிச்சிகனில் 40000 தொழிலாளர்களும் சிக்காகோவில் 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.
அமெரிக்காவின் பல்வேறு மாநிலங்களில் உள்ள தொழிலாளர் இயக்கங்களை இணைத்து 'அமெரிக்க தொழிலாளர் கூட்டமைப்பு' என்ற இயக்கம் உருவாக்கப்பட்டது.இவ்வியக்கம் 8மணி நேர வேலைக் கோரிக்கையை முன்வைத்து தொடர்ந்து போராட்ட இயக்கங்களை நடத்தியது.அத்தோடு மே 1, 1886அன்று நாடு தழுவிய வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. இவ்வியக்கமே மே தினம் பிறப்பதற்கு காரணமாகவும் அமைந்தது.
இவ்வாறு உலகெங்கும் நடந்த போராட்டத்தின் விளைவாக அமெரிக்காவில் இதற்கான வெற்றியை அடைந்தனர்.தொழிலாளர்களின் போராட்டத்தால் நிலைகுலைந்த அரசு அவர்களின் கோரிக்கையை 1890ம் ஆண்டு ஏற்றது.தொழிலாளர்களின் இந்த வெற்றியைக் குறிக்கும் விதத்தில் மே முதல் நாள் தொழிலாளர் தினமாக உலகெங்கும் கொண்டாடப்பட்டு வருகின்றது.
தொழிலாளர்கள் பேதங்களைக் கடந்து தொழிலாளர் என்னும் உணர்வுடன் ஒன்றுபட்டு போராடினால் வெற்றி கிடைத்தே தீரும் என்பதை மே தின வரலாறு நமக்கு உணர்த்துகின்றது.
ஈஸ்டர் தினத்தில் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல் சம்பவங்களால் அதிகளவு உயிர்ப்பலிகளைச் சந்தித்த எமது நாடு பெரும் சோகத்தில் மூழ்கியிருக்கும் இவ்வேளையில் பாட்டாளிகள் தினமும் வந்துள்ளது. இத்தினத்தை கொண்டாடும் இயல்பு நிலை தற்போது எங்களிடம் இல்லாத போதிலும் உலகத் தொழிலாளர்களின் பாதுகாப்பையும், உரிமைகளையும் இன்றைய தினத்தில் நினைவு கூருவோம்.
சாமஸ்ரீ- க.மகாதேவன்- உடப்பூர்
0 Comments:
Post a Comment