இலங்கை அரசியலில் இன்று இடம்பெறப்போவதென்ன ? ; காபந்து அரசாங்கத்தை அமைக்கிறார் ஜனாதிபதி
Posted by tahaval on November 20, 2019
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு புதிய காபந்து அரசாங்கமொன்றை அமைப்பதற்கு இடமளிக்கும் வகையில் பிரதமர் ரணில்
விக்கிரமசிங்க இன்று புதன்கிழமை பிரதமர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக நேற்றிரவு நம்பகரமான தகவல்கள் தெரிவித்தன.
அந்த வகையில் இன்றைய தினம் நாட்டு மக்களுக்கு உரையாற்றவுள்ள பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அதனையடுத்து இராஜினாமா கடிதத்தை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் இன்றைய தினம் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். இதன்போது இராஜினாமா கடிதத்தை சமர்ப்பிக்கும் சாத்தியம் இருப்பதாக கூறப்படுகின்றது.
இதேவேளை இன்றைய தினம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ புதிய பிரதமர் தலைமையிலான 15 அமைச்சர்களைக் கொண்ட ஒரு காபந்து அரசாங்கத்தை அமைக்கவுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் வரை அந்த அரசாங்கம் பதவியில் இருக்கும். எனினும் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவை நியமிப்பாரா அல்லது வேறு ஒருவரை நியமிப்பாரா என்பது குறித்து தெளிவான தகவல்கள் கிடைக்கவில்லை. மக்கள் ஐக்கிய முன்னணியின் தலைவர் தினேஷ் குணவர்த்தன பெரும்பாலும் பிரதமராக நியமிக்கப்படலாம் என்றும் தெரியவருகின்றது.
இதேவேளை 15 பேர் கொண்ட அமைச்சரவையில் இடம்பெறும் உறுப்பினர்கள் தொடர்பாக நேற்றிரவு மகிந்த தரப்பினரால் விரிவாக ஆராயப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
சட்டம் ஒழுங்கு நிதி நீதி வெளிவிவகாரம் உள்ளிட்ட 15 அமைச்சுக்கள் உருவாக்கப்படவுள்ளன. அவற்றுக்கே அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர்.
கடந்த திங்கட்கிழமை புதிய ஜனாதிபதியாக கோத்தாபய ராஜபக்ஷ பதவியேற்றதன் பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனினும் ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க பதவி விலக விரும்பாத நிலையில் இழுபறி நீடித்துவருகின்றது.
எனினும் பல்வேறு தரப்பினரு ம் ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியை இராஜினாமா செய்து புதிய அரசாங்கம் அமைக்க இடமளிக்கவேண்டும் என பலரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர். மேலும் சபாநாயகரும் பிரதமரும் எதிர்க்கட்சி தலைவரும் இது தொடர்பில் பேச்சுவார்த்தையும் நடத்தியிருந்தனர்.
இந்தச் சந்திப்பில் அரசாங்கத்தை முன்கொண்டு செல்வது தொடர்பிலும் பாராளுமன்ற தேர்தலுக்கான நடவடிக்கைகள் குறித்தும் ஆராயப் பட்டுள்ளது.
தற்போது ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையில் மூன்று திட்டங்களை சபாநாயகர் கருஜெயசூரிய தெரிவித்ததுடன் அது தொடர்பில் கட்சிகளுக்கிடையில் பேச்சுவார்த்தைகளை நடத்தி இறுதி முடிவினை தனக்கு அறிவிக்குமாறும் அதற்கிணங்க தான் முடிவொன்றினை எடுப்பதாகவும் அறிவித்துள்ளார்.
அரசியல் அமைப்புக்கு ஏற்றவகையில் நான்கரை வருடங்களின் பின்னர் பாராளுமன்றத்தை மார்ச் மாதம் கலைத்து தேர்தலை நடத்துவது, மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆதரவுடன் பாராளுமன்றத்தை கலைத்து தேர்தலை நடத்தவது. பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் அமைச்சர்களும் பதவி விலகி புதிய ஆட்சிக்கு இடமளிப்பது ஆகிய மூன்று வழிகளில் பிரச்சினைக்கு தீர்வுகாணமுடியும் என்றும் இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்து முடிவினை அறிவிக்குமாறும் சபாநாயகர் கட்சித் தலைவர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் இன்றைய தினம் சபாநாயகர் தலைமையில் கட்சி தலைவர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதன்போதும் அடுத்தக்கட்டம் குறித்து ஆராயப்படவுள்ளது. இதன்போது பெரும்பாலும் காபந்து அரசாங்கத்தை அமைப்பது தொடர்பான அறிவிப்பு வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கடந்த சனிக்கிழமை நடைபெற்ற நாட்டின் எட்டாவது ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ அமோக வெற்றியீட்டியதைடுத்து நாட்டில் புதிய அரசியல் நிலைமை தோன்றியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment