கணவன் குளிப்பது இல்லை என விவாகரத்து கோரிய மனைவி – யாழ். நீதிமன்றம் வழங்கிய அதிரடி உத்தரவு
Posted by tahaval on November 05, 2019
கணவன் குளிப்பது இல்லை எனக் காரணம் குறிப்பிட்டு விவாகரத்து கேட்டு மனைவி தாக்கல் செய்த மனுவை யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றம் தள்ளுபடி செய்து கட்டளையிட்டது.
“நீங்கள் காதலித்து திருமணம் செய்வீர்கள். பின்னர் குளிக்கவில்லை போன்ற சட்டத்தில் கூறப்படாத காரணங்களைக் குறிப்பிட்டு மண நீக்கம் கேட்டு வந்தால் நீதிமன்றம் கட்டளை ஆக்க முடியாது” என்று யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் கட்டளையில் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணம் புறநகர் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் தனது சட்டத்தரணி சர்மினி விக்னேஸ்வரன் ஊடாக விவாகரத்து கேட்டு யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றில் மனுத் தாக்கல் செய்தார்.
அவர் தனது மனுவில் விவாகரத்துக்கான காரணங்களில் ஒன்றாக கணவர் குளிப்பது இல்லை என்று குறிப்பிட்டிருந்தார்.
கணவர் தனது சட்டத்தரணி ரி.கணதீபன் ஊடாக மனைவியின் விவாகரத்து கோரிக்கையை ஒத்துக்கொண்டு வழங்குவதற்கு பதிலி இணைத்தார்.
இந்த நிலையில் மனு மீதான கட்டளைக்கு மன்று இன்று நியமித்திருந்தது.
யாழ்ப்பாணம் மாவட்ட நீதிபதி வி.இராமகமலன் மனுவைத் தள்ளுபடி செய்து கட்டளை வழங்கினார்.