இந்திய விமான விபத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை உயர்வு



இந்தியாவின் கேரளாவில் நேற்று இடம்பெற்ற விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 17 ஆக அதிகரித்துள்ளது. டுபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு பயணித்த ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 என்ற விமானம் நேற்றையதினம் விபத்திற்குள்ளாகியது. குறித்த விமானத்தில் 185 பயணிகள் மற்றும் 6 விமான பணிக்குழுவினர் என மொத்தம் 191 பேர் பயணித்துள்ளனர்.


 கோழிக்கோடு விமான நிலையத்தை வந்தடைந்த விமானம் 10 ஆவது ஓடுதளத்தில் தரையிறங்க முற்பட்டபோது, ஓடுதளத்தில் இருந்து விலகி அருகில் உள்ள பள்ளத்தில் வீழ்ந்து குறித்த விமானம் விபத்துக்குள்ளானதில் விமானம் இரண்டு துண்டுகளாக உடைந்தது. இதையடுத்த விமான விபத்தில் சிக்கியிருந்த அனைவரையும் மீட்ட படையினர் அவர்களை அருகில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். வைத்தியசாலையில் 

சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களில் 17 உயிரிழந்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர். இவ்வாறு இறந்தவர்களில் விமானி, துணை விமானியும் உள்ளடங்கியுள்ளனர். இதற்கிடையில், இந்த விபத்தில் விமானத்தில் உயிரிழந்த 17 பேர் தவிர ஏனையோர் சிகிச்சை பெற்று வருவதாகவும், அதில் 15 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகவும் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

0 Comments:

Post a Comment