காசாவில் அவசர போர் நிறுத்தத்திற்கு நெதன்யாகுவுக்கு பைடனும் அழுத்தம்
அமெரிக்காவின் புதிய ஜனாதிபதியாக டொனால் டிரம்ப் எதிர்வரும் ஜனவரி 20 ஆம் திகதி பதவி ஏற்பதற்கு முன்னர் போர் நிறுத்த உடன்படிக்கை ஒன்றுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையிலேயே பைடன் கடந்த ஞாயிறன்று, நெதன்யாகுவை தொலைபேசியில் அழைத்துள்ளார்.
கடந்த 15 மாதங்களுக்கும் மேலாக போரை முடிவுக்குக் கொண்டுவரும் மத்தியஸ்த முயற்சியில் அமெரிக்கா, எகிப்து மற்றும் கட்டார் ஈடுபட்டு வருவதோடு கடந்த காலங்களில் பல தடவைகள் உடன்பாடு ஒன்றை எட்டுவது நெருங்கிவந்த சூழலில் கடைசி நேரத்தில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.
இந்நிலையில் அண்மைய நாட்களில் கட்டார் தலைநகரில் போர் நிறுத்தப் பேச்சுகள் தீவிரம் அடைந்துள்ளன.
இந்த பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்கு இஸ்ரேலிய உளவுப் பிரிவான மொசாட்டின் தலைவர் டேவிட் பார்னி தலைமையிலான உயர்மட்ட பிரதிநிதிகள் குழுவொன்று கடந்த ஞாயிறன்று கட்டாரை சென்றடைந்தது. அதேபோன்று பைடனின் மத்திய கிழக்கு ஆலோசகர் பிரெட் மக்கர்க்கும் இந்தப் பேச்சுவார்த்தையில் பங்கேற்றுள்ளார்.
இஸ்ரேலிய உயர்மட்ட குழு இந்தப் பேச்சில் பங்கேற்பதை நெதன்யாகு அலுவலகம் உறுதி செய்திருக்கும் நிலையில் தற்போதைய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஒன்று எட்டப்பட்டால் அதில் கைச்சாத்திடுவதற்கான உயர் அதிகாரிகள் தற்போதும் கட்டாரில் உள்ளனர்.
இதில் இரு தரப்புக்கும் முன்வைப்பதற்கான இறுதிக் கட்ட ஆவணத்தை தயாரிக்கும் பணியில் மக்கர்க் ஈடுபட்டிருப்பதாக பைடனின் பாதுகாப்பு ஆலோசகர் ஜக் சுலிவன், சி.என்.என். செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். எனினும் ஜனவரி 20 ஆம் திகதிக்கு முன்னர் உடன்பாடு ஒன்று எட்டப்படுவது குறித்து எதிர்வுகூற முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘நாம் மிக மிக நெருங்கி விட்டோம்’ என்று கூறிய அவர், ‘நாம் மிக நெருங்கி இருந்தபோதும் எல்லைக் கோட்டை தாண்டாததால் தொலைதூரத்திலேயே இருக்கிறோம்’ என்றும் அவர் குறிப்பிட்டார்.
எவ்வாறாயினும் சில பணயக்கைதிகள் விடுவிக்கப்படும் வகையிலான கைதிகள் பரிமாற்றம் மற்றும் சில வாரங்கள் போரை நிறுத்தும் முதல் கட்ட போர் நிறுத்த உடன்படிக்கைக்கு மாத்திரமே தனது இணக்கத்தை நெதன்யாகு முன்னதாக வெளியிட்டிருந்தார்.
ஆனால் பெரும் அழிவை ஏற்படுத்தி இருக்கும் காசா பகுதியில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் முழுமையாக வாபஸ் பெறுவதை ஹமாஸ் அமைப்பு வலியுறுத்துகிறது. மறுபுறம் காசாவில் ஹமாஸின் போர் புரியும் திறனை முழுமையாக ஒழிப்பதில் நெதன்யாகு தொடர்ந்து உறுதியாக உள்ளார்.
இந்நிலையில் போர் நிறுத்த உடன்படிக்கையின் முதல் கட்டத்தில் விடுவிக்கப்படும் பணயக்கைதிகள் மற்றும் இஸ்ரேலிய சிறையில் இருந்து விடுவிக்கப்படும் பலஸ்தீன கைதிகள் அதேபோன்று காசாவில் மக்கள் வசிக்கும் பகுதிகளில் இருந்து இஸ்ரேலிய துருப்புகள் வாபஸ் பெறும் விவகாரங்கள் உட்பட விடயங்கள் தொடர்பிலேயே பேச்சுவார்த்தை இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் இஸ்ரேலிய பேச்சுவார்த்தைக் குழு மேலும் ஒரு தினம் கட்டாரில் தங்கி இருந்து உடன்பாடு ஒன்றுக்கான இறுதி விபரங்களை உறுதி செய்யும் முயற்சியில் ஈடுபடும் என்று அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே அமெரிக்க ஜனாதிபதியாக பதவி ஏற்கவுள்ள டிரம்பின் மத்திய கிழக்கு தூதுவர் ஸ்டீவ் விட்கொப் கடந்த சனிக்கிழமை நெதன்யாகுவை சந்தித்து பேசியதோடு போர் நிறுத்தம் ஒன்றுக்கு அழுத்தம் கொடுத்திருந்தார்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்பட்டிருப்பதாக இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன அதிகாரிகள் கடந்த வியாழக்கிழமை தொடக்கம் கூறி வருகின்றபோதும் அது தொடர்பான விபரங்களை வெளியிடவில்லை.
பேச்சுவார்த்தைகள் இடம்பெற்று வருகின்றபோதும் காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களில் எந்தத் தணிவும் ஏற்படவில்லை. காசா நகரில் இடம்பெயர்ந்த பலஸ்தீனர்கள் அடைக்கலம் பெற்றிருக்கும் சலாஹ் அல் தீன் பாடசாலை மீது இஸ்ரேல் நேற்று நடத்திய தாக்குதலில் ஐந்து பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டனர்.
காசா நகரில் சுஜையா பகுதி மற்றும் அல் ஷட்டி அகதி முகாமை இலக்கு வைத்து நேற்று இடம்பெற்ற தாக்குதல்களில் மேலும் இரு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு பலரும் காயமடைந்திருப்பதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் குறைந்தது 19 பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக காசா சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 46,584 ஆக அதிகரித்திருப்பதோடு மேலும் 109,731 பேர் காயமடைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment